ஓசூரில் வாலிபர்களை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் வாலிபர்களை தாக்கி 2 செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
செல்போன் பறிப்புகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் திருவரசு (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர் திருவரசை தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதே போல ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது ஷாரூக் (18), அஸ்கர் (18). இவர்கள் நேற்று முன்தினம் இரவு பாகலூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல், செல்போன்களை கேட்டனர். இவர்கள் தர மறுத்ததால் அந்த கும்பல் 2 பேரையும் தாக்கி விட்டு முகமது ஷாரூக்கின் கைகளில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றார்கள்.
வலைவீச்சுகொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கர் (21). இவர் பாகலூர் சாலையில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு பாகலூர் சாலையில் நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை கல்லால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவங்களில் காயம் அடைந்த திருவரசு, முகமது ஷாரூக், அஸ்கர், சங்கர் ஆகியோர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து அவர்கள் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.