மின்பாதை அமைக்கும் பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

தர்மபுரி மாவட்டத்தில் மின்பாதை அமைக்கும் பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்;

Update: 2017-03-17 23:00 GMT

தர்மபுரி

மின்வழிப்பாதை

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் விவேகானந்தனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே அமைந்துள்ள பவர்கிரீட் மின்சேகரிப்பு மற்றும் வினியோக மையத்திற்கு கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 600 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வரும் மின் வழிப்பாதையில் 765 கே.வி. மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். தற்போது 200 கே.வி. அளவில் மின்சாரம் இந்த மின்வழி பாதையில் கொண்டு வரப்படுகிறது. இந்த மின்வழி பாதையில் மின்சாரம் செல்லும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரத்தின் தாக்கம் லேசாக ஏற்பட்டு வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை

இதன்காரணமாக மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி விடுவோமோ, என்று பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். எனவே மின்சாரம் செல்லும் கோபுரங்கள் மற்றும் மின் வழிப்பாதையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

பாலக்கோடு தாலுகா பகுதியில் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிக்காக விவசாய நிலங்களில் உள்ள தென்னை, பாக்கு, மா, வாழை மரங்கள் வெட்டப்படுகிறது. இதில் தென்னைக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு போதுமானதாக இல்லை. இந்த பணிக்காக வெட்டப்பட்ட அனைத்து வகை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்