பர்கூர் மலைப்பகுதியில் இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நிற்பதால் பொது மக்கள் கடும் அவதி

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-03-16 22:30 GMT
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 கிராமங்கள் உள்ளன. மலைக்கிராம மக்கள் விபத்தில் சிக்கினாலோ, வனவிலங்குகளால் தாக்கப்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 40 கி.மீ. தூரத்தில் உள்ள அந்தியூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுப்பார்கள்.

அந்தியூரில் இருந்து பர்கூர் மலைக்கிராமத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல சுமார் 1½ மணி நேரம் ஆகும். பின்னர் அங்கிருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு அந்தியூருக்கு கொண்டு செல்வார்கள். சுமார் 3 மணி நேரம் ஆனதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. எனவே பர்கூர் மலைப்பகுதி கிராம மக்கள் பயன்பெற பர்கூர் மலைக்கிராமத்திலே 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த வாகனம் பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் விபத்து, மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுப்பார்கள். தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி உடனடியாக அந்தியூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார்கள். நேரமும் மிச்சமானதால் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் பழுதானது. பழுது பார்ப்பதற்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் இதுவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யவில்லை. இதனால் மலைக்கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் கூறும்போது, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேக் பழுதடைந்துள்ளது. அதை சரிசெய்து கொடுத்தால் மட்டுமே எங்களால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க முடியும்’ என்றனர். 

மேலும் செய்திகள்