கொள்ளை முயற்சியின்போது சிறுவனை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

கொள்ளை முயற்சியின்போது சிறுவனை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-03-16 22:08 GMT

மும்பை,

கொள்ளை முயற்சியின்போது சிறுவனை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுவனுக்கு கத்திக்குத்து

மும்பை கோவண்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் முகமது ஆஷிப்(வயது22). போதைப்பொருளுக்கு அடிமையானவர். மேலும் அந்த பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு 13–ந்தேதி அதே பகுதியை சேர்ந்த சாஜித் சேக் என்ற 14 வயது சிறுவனிடம் ஓட்டலில் சாப்பிடுவதற்கு பணம்கேட்டு மிரட்டி உள்ளார்.

அப்போது சிறுவன் பணம் இல்லை என்று அவரிடம் கூறியுள்ளான். இதனால் கோபம் அடைந்த முகமது ஆஷிப், சிறுவன் சாஜித் சேக்கை பைங்கன்வாடி பகுதிக்கு தூக்கிச்சென்று கழுத்து மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு, அவனிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றார்.

ஜெயில் தண்டனை

கத்திக்குத்தில் காயம் அடைந்த சிறுவன் வேதனை தாங்க முடியாமல் சத்தம்போட்டான். சிறுவனின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதற்கிடையே முகமது ஆஷிப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அவர்கள் ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் சாஜித் சேக் குணமானான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆஷிப்பை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முகமது ஆஷிப் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி முகமது ஆஷிப்புக்கு நீதிபதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்