விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ‘எதிர்க்கட்சியினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்’ சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
‘‘விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்’’ என்று சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.;
மும்பை,
‘‘விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர்’’ என்று சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
தேவேந்திர பட்னாவிஸ்மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியதும், கேள்வி நேரத்துக்கு சபாநாயகர் ஹரிபாவு பாக்டே அழைப்பு விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த சிவசேனா உறுப்பினர்கள், சபையின் மையப்பகுதிக்கு வந்து விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு கோஷமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, சட்டசபை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும், விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் எதிர்க்கட்சியினரை விமர்சித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார். அவர் கூறியதாவது:–
முதலை கண்ணீர்விவசாய கடன் தள்ளுபடி கோர உங்களுக்கு (எதிர்க்கட்சி) உரிமை கிடையாது. பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா மட்டுமே விவசாய கடன் தள்ளுபடி கோர முடியும். நடந்து முடிந்த மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் நீங்கள் மோசமான தோல்வியை சந்தித்தீர்கள்.
உங்களது கோரிக்கை அரசியல் நோக்கம் கொண்டது. விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் நீங்கள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். கடன் தள்ளுபடிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எப்போது, எப்படி அதனை அறிவிக்க வேண்டும் என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.
ரூ.1 கோடியே 14 லட்சம் கடன்இதுவரை 1 கோடியே 36 லட்சம் விவசாயிகள், ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் பெற்றிருக்கின்றனர். இதில், ரூ.63 கோடி விவசாய கடன். ரூ.51 கோடி தனிப்பட்ட கடன். ரூ.31 ஆயிரத்து 57 கோடி தவணை செலுத்தாமல் தாமதமாகி விட்டது. ரூ.30 ஆயிரத்து 500 கோடி காலாவதி ஆகிவிட்டது.
மாநில அரசின் மொத்த செலவினம் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் கோடி. இதில், ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஊதியமாக சென்றுவிட்டது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.34 ஆயிரத்து 421 கோடியும், மாநில அரசின் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரத்து 407 கோடியும் செலவிடப்பட்டு இருக்கிறது.
இதேபோல், ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர் காப்பீட்டுக்கும், இயற்கை பேரிடர் நிவாரண உதவிக்கும் செலவிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிக்கு கேள்விகாலாவதி ஆன கடன் தொகை ரூ.30 ஆயிரத்து 500 கோடியை நாங்கள் தள்ளுபடி செய்யும் பட்சத்தில், ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?. கடந்த 2008–09–ம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்து 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர்.
கடன் தள்ளுபடி அறிவித்தால், வேளாண்துறையில் முதலீடு செய்ய அரசிடம் நிதி இருக்காது. கடன் தள்ளுபடி அளித்த ஓராண்டுக்குள்ளேயே விவசாயிகள் கடனாளிகளாக மாறிவிடுவார்கள். கடந்த முறை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது கூட, விவசாயிகள் மீண்டும் கடன் பெற தகுதியற்றவர்கள் என்று வங்கிகள் கணித்தன.
காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பயன்பெறவே எதிர்க்கட்சியினர் கடன் தள்ளுபடி கோருகின்றனர்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.