செங்கல்பட்டு அருகே நூதன முறையில் மாணவனை ஏமாற்றி 36 பவுன் நகை திருட்டு

செங்கல்பட்டு அருகே நூதன முறையில் மாணவனை ஏமாற்றி 36 பவுன் நகை மற்றும் ரூ.53 ஆயிரத்து 600–ஐ திருடி சென்றனர்.

Update: 2017-03-16 21:20 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே நூதன முறையில் மாணவனை ஏமாற்றி 36 பவுன் நகை மற்றும் ரூ.53 ஆயிரத்து 600–ஐ திருடி சென்றனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் அனுப்பி வைத்தார்

செங்கல்பட்டை அடுத்த திருமணி ஆலன்சாலையை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மணியம்மாள். இவர்கள் இருவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் லோகேஷ். 10–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். லோகேஷ் வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் மோட்டார்சைக்கிளில்  மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வீட்டுக்குள் சென்றனர்.

பின்னர் இருவரும், உனது தாயார் மார்க்கெட்டில் நிற்கிறார். வீட்டில் உள்ள நகை, பணத்தை வாங்கி வருமாறு எங்களை அனுப்பி வைத்தார் என்று மயக்கும் வகையில் பேசினர்.

போலீசில் புகார்

அவர்களின் பேச்சில் மயங்கிய  லோகேஷ் பீரோவை திறந்து அதில் இருந்த 36 பவுன் நகை, ரூ.53 ஆயிரத்து 600ஐ எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து மணியும் அவரது மனைவி மணியம்மாளும் வீடு திரும்பினர். அப்போது தான் மர்மநபர்கள் நூதன முறையில் நகை–பணத்தை திருடி சென்றிருப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்