மீட்டர் போடாமல் சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

புதுவையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் போடாமல் சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2017-03-16 23:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி மீட்டர்களை திருத்தி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்களை போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் புதிய கட்டண விகிதப்படி பல ஆட்டோக்களில் மீட்டர்கள் திருத்தப்படவில்லை. சிலர் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தாமலேயே தொடர்ந்து ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர். மீட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில் அதில் காட்டுவது போல் கட்டணம் வசூலிப்பது இல்லை. இதனால் ஆட்டோ டிரைவர்களும், பயணிகளுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக அடிக்கடி பிரச்சினைகள் நடந்து வருகின்றன.

திடீர் சோதனை


இதுகுறித்து பயணிகள் சார்பில் அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் உத்தரவின்பேரில் உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ் தலைமையில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், ரவிசங்கர் மற்றும் குழுவினர் நேற்று மாலை கொக்கு பார்க் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அந்த வழியாக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது சுமார் 30 ஆட்டோக்களில் மீட்டர் போடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த ஆட்டோ டிரைவர்களை போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்