கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 90 சதவீத டாக்டர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் தகவல்

அரசு ஆஸ்பத்திரிகளில் 90 சதவீத டாக்டர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாக சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

Update: 2017-03-16 20:31 GMT

பெங்களூரு,

அரசு ஆஸ்பத்திரிகளில் 90 சதவீத டாக்டர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாக சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

2 ஆயிரம் துணை மருத்துவ ஊழியர்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் மது பங்காரப்பா, பா.ஜனதா உறுப்பினர்கள் ஜீவராஜ், லட்சுமண் சவதி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பது குறித்து கேட்ட கேள்விகளுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் பதில் அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 2 ஆயிரத்து 353 அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் 90 சதவீதம் நிரப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 சதவீத காலியிடங்களும் அதாவது, 40 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். காலியிடங்களை நிரப்பும் வகையில் சுமார் 2,000 துணை மருத்துவ ஊழியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நியமன பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும்.

ஆயுர்வேத டாக்டர்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் கிடைக்கும் மருத்துவ சேவைகள் குறித்து அறிய நான் திடீரென அங்கு ஆய்வு செய்கிறேன். இதன் மூலம் மருத்துவ சேவைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துள்ள டாக்டர்களை நியமிக்கும் பொறுப்பு மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் கிடைக்காவிட்டால் ஆயுர்வேத டாக்டர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள ‘டி’ பிரிவு ஊழியர்களை நியமிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். புதிதாக கட்டப்படும் ஆஸ்பத்திரி கட்டிடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்