கத்தியைக்காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது

ஈஞ்சம்பாக்கத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-16 21:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மேற்கு கே.கே.நகரை சேர்ந்தவர் முரளி (வயது 19). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது நண்பருடன் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். பின்னர் ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி முரளியிடம் இருந்து 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான மொபட்டின் பதிவு எண்ணை வைத்து அதை தேடி வந்தனர். இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் மதுபான கடை அருகே அந்த மொபட்டுடன் நின்ற 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், செங்கல்பட்டு படாளத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (31), வெட்டுவாங்கேணியை சேர்ந்த ராஜேஷ் (30), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பதும், மதுபானம் அருந்த பணம் இல்லாததால் 3 பேரும் கடற்கரைக்கு வந்த முரளியிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்