சுரண்டை அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது சிறையில் அடைக்கப்பட்டனர்
சுரண்டை அருகே அத்துமீறி பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.
சுரண்டை,
சுரண்டை அருகே அத்துமீறி பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார். அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்பாளையங்கோட்டை பெருமாள்புரம் எமரால்டு நகரைச் சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 47). இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுரண்டை அருகே உள்ள கழுநீர்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (45) ஆட்டோ டிரைவர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
நேற்று முன்தினம் இரவில் இன்பராஜ், தனது நண்பரான இசக்கிமுத்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு வைத்து 2 பேரும் மது அருந்தினார்கள். பின்னர் 2 பேரும் வெளியே நடந்து சென்றனர்.
பெண்ணிடம் சில்மிஷம்அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற 2 பேரும் கதவை தட்டினார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெளியே வந்தார். அவரது வீட்டில் யாரும் இல்லாததை அவர்கள் தெரிந்து கொண்டனர். இதையடுத்து 2 பேரும் மோட்டார் சைக்கிள் சாவியை காணவில்லை என்றும் அதை தேடிவந்ததாகவும் தெரிவித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் இன்பதுரை, இசக்கிமுத்து திடீரென்று அந்த பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
2 பேர் கைதுஇதுகுறித்து உடனடியாக வீரகேரளம்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்பராஜ், இசக்கிமுத்துவை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். அப்போது, இன்பராஜ் போலீசாக பணியாற்றி வருவது தெரியவந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மேல் விசாரணை நடத்தினார். அப்போது, 2 பேரும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்பராஜ், இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.