தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-16 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனை ஏதும் இல்லாமல் அரசு தொடர வேண்டும், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், தபால் துறையில் கிராமப்புற ஊழியர்கள் 2½ லட்சம் பேருக்கு கமிட்டி பரிந்துரைகளின் படி பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

800 தபால் ஊழியர்கள்

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் துறை ஊழியர்கள், வருமான வரித்துறையினர் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கோட்டத்தில் 800 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள 3 தலைமை தபால் நிலைய அலுவலகங்கள், 79 துணை தபால் நிலைய அலுவலகங்கள், 215 கிளை தபால் நிலைய அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மேலும், இந்த போராட்டத்தில் வருமான வரித்துறையை சேர்ந்த 37 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்