அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும்
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும்
வடமதுரை,
அய்யலூர் ஆட்டுச்சந்தை
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. மாவட்டத்திலேயே இந்த சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சந்தை கூடும். ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம்.
அய்யலூர் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் முகாமிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
சந்தை நடைபெறும் நாளில், அய்யலூர் நகரம் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கும். சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். காலை 5 மணிக்கு விற்பனை தொடங்கி மாலை வரை நடைபெறும். சாதாரணமாக, ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறும்.
ரூ.1 கோடிக்கு விற்பனைதீபாவளி, பக்ரீத், பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனை ரூ.1 கோடியை தாண்டும். பாரம்பரியம் மற்றும் பல்வேறு சிறப்பினை தன்னகத்தே கொண்ட அய்யலூர் ஆட்டுச்சந்தை அடிப்படை வசதியின்றி காணப்படுகிறது. போதிய இடவசதி இல்லை. தனியாருக்கு சொந்தமான இடத்திலேயே பல ஆண்டுகளாக சந்தை நடந்து வருகிறது.
இடநெருக்கடி காரணமாக சாலையோரத்திலும் வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதி கிடையாது. சந்தை வளாகம் முழுவதும் சுகாதாரம் இன்றி காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். சந்தையில் மேற்கூரை எதுவும் இல்லாததால் மழையில் நனைவதும், சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, அய்யலூர் ஆட்டுச்சந்தைக்கு என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் அங்கு மேற்கூரை அமைத்து குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற அடிப்படை வசதியை மேம்படுத்தினால், ஆடு மற்றும் கோழி விற்பனை மேலும் அதிகரிக்கும். இதனால் பேரூராட்சிக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்.