கரூர் அன்புநாதன் மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு 6 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க போலீசாருக்கு அறிவுரை

கரூர் அன்புநாதன் மீதான தேர்தல் வழக்குகளை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2017-03-16 23:00 GMT

மதுரை,

தேர்தல் வழக்கு

கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன். அ.தி.மு.க. பிரமுகர். கடந்த சட்டசபை தேர்தலின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் அவரது வீட்டில் இருந்த 10 லட்சத்து 32 ஆயிரத்து 820 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக புகார் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அன்புநாதன் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அன்புநாதன் வீட்டில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமான வரிச்சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரத்து செய்ய வேண்டும்

இந்த 2 வழக்குகளிலும் அன்புநாதனுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்தநிலையில் அந்த 2 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “வருவாய் அதிகாரி புகாரின்பேரில் வருமான வரிச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாது. போலி ஆம்புலன்ஸ் வாகனம் அன்புநாதனுக்கு சொந்தமானது இல்லை“ என்று வாதாடினார்.

பின்னர் ஆஜரான அரசு வக்கீல், இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்“ என்று தெரிவித்தார்.

6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றனர். தேர்தல் பறக்கும் படையில் இடம் பெற்றிருக்கும் வருவாய் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வீடுகளில் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்யவும், பின்னர் உரிய துறைக்கு தகவல் அளிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது“ என்றார்.

பின்னர், அன்புநாதன் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

அன்புநாதன் மீதான வழக்கு விசாரணையை போலீசார் 6 மாதத்தில் முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது வழக்கை முடித்துவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அன்புநாதன் வீட்டில் ரூ.10.32 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறையை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 19–ந்தேதிக்கு நிதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்