உலக தண்ணீர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடிகர் பாண்டு பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தது.

Update: 2017-03-16 20:30 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் பாண்டு கலந்து கொண்டு சுற்றுச்சூழல், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து மாணவ–மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வேட்டவலம், தண்டராம்பட்டு, பனைஓலைப்பாடி, பரமனந்தல், பழையனூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து 3 போட்டிகளில் மாணவர்களின் சிறந்த 3 படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நடிகர் பாண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பையை அறிமுகப்படுத்தினார். அதனை திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் பாலாஜி பெற்றுக்கொண்டார்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 129 பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்