தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-16 23:00 GMT

கிருஷ்ணகிரி,

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 3–ம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சையத் பயாஸ் அகமது கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

கோரிக்கைகள்

இதில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். உதவி இயக்குனர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாஸ்கர் ஆகியோர் பேசினார்கள். மாநில செயலாளர் ஆறுமுகம் 3–ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கி பேசினார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

3 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதால் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்