பென்னாகரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

பென்னாகரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிச்சென்றனர்.;

Update: 2017-03-16 22:45 GMT

பென்னாகரம்

ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அவ்வை நகரை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 39). இவர் முதுகம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர் நாச்சானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். மாலை மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து சக்திகுமார் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்