உமிழ் நீரில் இருந்து வலிநிவாரண மருந்து

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பார்கள். இது பழமொழி மட்டுமல்ல நிதர்சனமான உண்மை என்பதை உறுதிசெய்ய ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும்.

Update: 2017-03-16 15:00 GMT
அத்தகைய ஒரு உதாரணம் சமீபத்திய ஒரு ஆய்வில் உருவாகியுள்ளது. எச்சிலில் இருந்து பக்கவிளைவுகளே இல்லாத ஒரு வலி நிவாரணியை உற்பத்தி செய்து அசத்தியுள்ளனர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
எச்சிலை ஒரு மகத்துவம் நிறைந்த பொருளாக பார்க்கும் அனுபவம் நமக்கு மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஆனால் சிறு வயதில் திடீரென்று ஒரு காயம் ஏற்பட்டால் அதில் உடனே நம் எச்சிலை தடவிய நேரடி அனுபவமும், அப்படி செய்தால் காயம் உடனே குணமாகும் என்ற கேள்வி ஞானமும் நம்மில் பலருக்கும் இருக்கும்.

ஆக, எச்சிலில் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதனை தற்போது அறிவியலும் ஆமோதித்துள்ளது. எச்சிலில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட, பக்க விளைவுகள் இல்லாத ஒரு வலிநிவாரணியை கொடுத்தால் நாம் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்?

வலி என்பது மனிதனுக்கு அத்தியாவசியமான ஒரு உணர்வு. நம் தோல், திசுக்கள் மற்றும் உடல் பாகங்களில் உள்ள உணர் நரம்புகளின் (Sensory nerves) முடிவுகள் வெப்பம், குளிர், அழுத்தம் அல்லது ஒரு திசுக்காயம் காரணமாக உயிரணுக்கள் வெளியிடும் ரசாயனங்கள் ஆகியவற்றால் தூண்டப்படும்போது அவை மத்திய நரம்பு அமைப்பான மூளையைச் சென்றடைந்து, மூளைத் தண்டு வடம் மற்றும் மூளையின் ‘செரிபரல் கார்டெக்ஸில்’ உள்ள நரம்புகளைத் தூண்டிவிடுவதால் வலியை நாம் உணர்கிறோம்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் உணரப்பட்டு அதற்கான எதிர்வினையை செயல்படுத்தும் வலியானது உயிர்வாழ்தல் மற்றும் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஒன்று. ஆனால் அதே வலி நோய்கள் காரணமாக வாழ்நாள் முழுக்க தொடர்ந்தால் அது நரகம். உதாரணமாக, முதுகுவலி, மூட்டு வலி அல்லது நீரிழிவினால் ஏற்படும் நரம்பு வலி
(neuralgia)
ஆகியவற்றைக் கூறலாம்.

கடந்த பல நூற்றாண்டுகளாக வலி நிவாரணியாக அதிகம் பயன்படுத்தப்படுவது ஓப்பியம் பாப்பி (opium poppy) எனும் தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஓப்பியாய்டு (opioids) எனும் வகையைச் சேர்ந்த ‘மார்பின்’
(Morphine)
தான்.
மார்பின் மற்றும் செயற்கை ஓப்பியாய்டுகளான கொடீய்ன், பென்டனில் (codeine, fentanyl) ஆகியவை தண்டுவடத்தில் உள்ள நரம்புகளின் மீதுள்ள ஓப்பியாய்டு ஏற்பி (opioid receptor) எனும் புரதங்களுடன் ஒட்டிக்கொண்டு அவற்றின் செயல்பாட்டை தடை செய்வதன் மூலமாக வலி ஏற்படுவதை தடுக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, நம் உடலில், வலி உணர்வுகள் பயணம் செய்யும் தடத்தில் உள்ள நரம்புகள் என்கெபாளின் (encephalin) எனும் ஓப்பியாய்டு புரத துண்டுகளை (opioid peptides) உற்பத்தி செய்து வெளியிடுகின்றன.

இந்த என்கெபாளின் புரதங்களும் மார்பின் போலவே ஓப்பியாய்டு ஏற்பிகள் மூலமாக வலியை தடை செய்கின்றன.

எச்சிலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ‘ஓப்பிஆர்பின்’ (opiorphin) புரதம் என்கெபாளின் புரதத்தை பிரதிபலிக்கக் கூடியது. ஆனால் ஓப்பிஆர்பின் புரதமானது என்கெபாளின் போல ஓப்பியாய்டு ஏற்பிகள் மூலமாக வலியை தடை செய்யாமல் என்கெபாளின் புரதம் உடைந்து போகாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டது.

அதனால், ஓப்பிஆர்பின் உடலுக்குள் செல்லும்போது உடலின் இயற்கை வலி நிவாரணியான என்கெபாளினுடைய அளவு அதிகமாக எந்தவிதமான பின் விளைவுகளும் இல்லாமலேயே வலி நிவாரணம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உடலின் ஜீரண மண்டலம் அல்லது ரத்த ஓட்டத்தில் ஓப்பிஆர்பின் உடைந்து போகும் வாய்ப்பு இருப்பதால் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் வலியை அதனால் தடுக்க முடியாமல் போகலாம். இந்த நடைமுறைச் சிக்கலை தவிர்க்கும் உறுதியான ஓப்பிஆர்பினான் வடிவம் ஒன்று தற்போது உருவாக் கப்பட்டுள்ளது. இதை
எஸ்.டி.ஆர்.324 (STR324)
என்று அழைக்கிறார்கள். வாய் வழியாக மற்றும் ஊசி மூலம் செலுத்தப் படும் இரண்டு வகையான வடிவங்களில் எஸ்.டி.ஆர்.324 தயாரிக் கப்பட்டு, அதைப் பயன்படுத்தி மனித ஆய்வுகள் மேற் கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த ஆய்வு முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்தால் ‘பக்க விளைவுகள் இல்லாத எச்சில் வழி வலி நிவாரணம்’ உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைகளில் விரைவில் கிடைக் கும்!

மேலும் செய்திகள்