நான்குவழிச்சாலைகளில் மரக்கன்றுகளை ஒரு மாதத்துக்குள் நட வேண்டும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

13 மாவட்டங்களில் உள்ள நான்குவழிச்சாலைகளில் மரக்கன்றுகளை ஒரு மாதத்துக்குள் நட வேண்டும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2017-03-15 22:45 GMT

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் நான்கு வழிச்சாலைகளில் ஒரு மாதத்துக்குள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சாலைக்காக மரங்கள் அகற்றம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த வக்கீல் எஸ்.எம்.ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டுவது தொடர்பான வழக்கில், அகற்றப்படும் ஒவ்வொரு மரத்துக்கு பதிலாக 3 மடங்கு கூடுதலாக மரக்கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான நெடுஞ்சாலையில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு பதிலாக 5 லட்சத்து 34 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அப்படிச் செய்யவில்லை. இதனையடுத்து ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை 6 வாரத்துக்குள் நட வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையிலும் உரிய மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறையினர் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலாளர் விஜய் ஜிப்பர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் ஆர்.பி.சிங் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஆணைய தலைவர் தரப்பில், ‘கோர்ட்டு உத்தரவின்படி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன‘ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வக்கீல் கமி‌ஷனர் அழகுமணி ஆஜராகி, “பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்தேன். ஒரு சில இடங்களில் தான் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன“ என்றார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளில் ஒரு மாதத்துக்குள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்