எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்

எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதம்

Update: 2017-03-15 23:15 GMT

மதுரை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பழங்காநத்தத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மடீட்சியா தலைவர் முராரி முன்னிலை வகித்தார்.

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளன. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தின் அருகிலேயே நான்கு வழிச்சாலை, சர்வதேச விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவை உள்ளன.

சிறந்த இடம்

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைப்பதன் மூலம் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயன்அடைவார்கள். தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு போதிய வசதி இல்லை. மதுரையில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு 220 ஏக்கர் நிலம் உள்ளது. அதுபோல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதே சிறந்ததாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி துணை தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், சாஸ்தா பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.ஏல்.ஏ.க்கள் நன்மாறன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரதத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறுந்தொழில்கள் சங்கம் உள்பட 27 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்