சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் கைக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.;

Update: 2017-03-15 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் சத்துணவு மைய அமைப்பாளர்கள் பணியிடங்கள் 35–ம், சமையல் உதவியாளர் பணியிடங்கள் 62–ம் ஆக மொத்தம் 97 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்களில் பணிபுரிய விரும்புபவர்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் கடந்த வாரம் 3 நாட்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் நேர்காணலுக்கான கடிதங்களும் வழங்கப்பட்டன.

ஒத்திவைப்பு


அதன்படி அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு 15–ந் தேதியும் (நேற்று), தக்கலை, திருவட்டார், கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம் ஆகிய ஒன்றியங்களுக்கு 16–ந் தேதியும் (இன்று) நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 2 நாட்கள் நடைபெற இருந்த நேர்காணல்கள் நிர்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நேர்காணல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏமாற்றம்


ஆனால் இது தெரியாமல் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தங்கோடு ஒன்றியங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் நேர்காணல் நடைபெறும் என்ற எண்ணத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது தாய்– தந்தை உள்ளிட்ட உறவினர்களுடனும், பலர் தங்களது கணவர் மற்றும் கைக்குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.

ஆனால் நேற்று நேர்முகத்தேர்வு நடைபெறாததால் அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலக அறிவிப்பு பலகை, சுவர், தூண்கள் போன்றவற்றில் நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதைப்பார்த்துவிட்டு நேர்முகத்தேர்வுக்கு வந்த பெண்களும், அவர்களுடன் வந்திருந்தவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். பல பெண்கள் அந்த வளாகத்தில் உள்ள மரத்தடியில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்துவிட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்