டெல்லியில் சேலம் மாணவர் மர்ம சாவுக்கு நீதி விசாரணை கேட்டு மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமாக இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-15 23:00 GMT
கிருஷ்ணகிரி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தான் தங்கியிருந்த நண்பர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் தலித் சமுதாய மாணவர்களுக்கு எதிராக பேராசிரியர்கள் நடப்பதாக முகநூல் பக்கத்தில் ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். இதனால் சாதிக் கொடுமையின் காரணமாக மர்மமான முறையில் மாணவர் முத்துகிருஷ்ணன் இறந்துள்ளார் என அவரது பெற்றோரும், பல்வேறு அமைப்பினரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்


இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள், முத்துகிருஷ்ணன் மர்ம சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தொடர்ச்சியாக நடைபெறும் மாணவர் தற்கொலைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். பெண்கள் மீதான அடக்கு முறையினை கைவிட வேண்டும். இறந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், துணைத் தலைவர் அருணகிரி, துணை செயலாளர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்