ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

சுத்துக்குளம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

Update: 2017-03-15 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுத்துக்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி முனீஸ்வரன் கோவிலில் இருந்து சுத்துக்குளம் கிராமத்தினரால் சீர்வரிசை பொருட்கள் வாடிவாசலுக்கு எடுத்து வரப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஒருவர் காயம்

காளை முட்டியதில் காட்டகரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 45) என்பவர் காயம் அடைந்தார். அவருக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினரால் சில்வர் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்