மத்திய சிறையை முற்றுகையிட முயற்சி: மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் 45 பேர் கைது

திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2017-03-16 04:30 IST
திருச்சி,

முற்றுகையிட முயற்சி

திருச்சி மத்திய சிறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 கைதிகளை தனிப்படை போலீசாரும், சிறைவார்டன்களும் தாக்கியதாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மத்திய சிறை நுழைவு வாயில் முன்பு நேற்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் திரண்டு வந்து திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நுழைவு வாயில் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர்.

45 பேர் கைது

இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகள் மீது தாக்குதல் நடத்திய தனிப்படை போலீசார், வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சிறை அதிகாரிகள், போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்