சாலை விபத்து இல்லாத மாவட்டமாக கடலூர் உருவாக்க வேண்டும் கலெக்டர் ராஜேஷ் பேச்சு

கடலூர் மாவட்டத்தை சாலை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் ராஜேஷ் பேசினார்.

Update: 2017-03-15 22:45 GMT

கடலூர்

கடலூர் மாவட்ட போக்குவரத்துதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:–

மாவட்டத்தில் 2015–ம் ஆண்டு உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 522. உயிரிழப்பு இல்லாத விபத்துகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 946. கடந்த ஆண்டு(2016) உயரிழப்பு ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 506. உயிரிழப்பு இல்லாத விபத்துகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 858. கடந்த 2015–ம் ஆண்டை விட 2016–ம் ஆண்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சாலை விதிகளை மதிக்கவும், பழுது இல்லாத வாகனங்களை இயக்கவும், ஹெல்மெட் அணிந்து செல்லவும் பொது மக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்த தேவையான கருத்துருக்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தால் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விபத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தின் எதிர்காலமே முடங்கிவிடும். எனவே சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை வேண்டும். கடலூர் மாவட்டத்தை சாலை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

39 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து பேசும்போது, கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 2016 ஜனவரி முதல் டிசம்பர் முடிய 30 ஆயிரத்து 936 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. 6 ஆயிரத்து 948 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. வாகன அனுமதி இல்லாதது, தகுதி சான்று, வரி செலுத்தாதது போன்ற பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 77 லட்சம் அபராத கட்டணம் வசூல் செய்யப்பட்டது. மேலும் சாலை விபத்தின் போது உயிரிழப்பை ஏற்படுத்திய 39 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 51 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன என தெரிவித்தார்

குறும்படம்

கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து குறும்படம் மூலம் அலுவலர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. தங்கள் துறை மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்களை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வருவாய் அலுவலர் விஜயா, சப்–கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சண்முகம், அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு, குடும்பநலத்துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்