வடமதுரை அருகே தார்பாயில் மழைநீரை சேகரிக்கும் விவசாயிகள்

வடமதுரை அருகே, விவசாயிகள் தார்பாயில் மழைநீரை சேகரித்து வருகின்றனர்.

Update: 2017-03-15 22:45 GMT

வடமதுரை

பருவமழை பொய்த்து போனதால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறது. அங்கு 1,000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது.

இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் பயிர்கள் கருகி வருகின்றன. ஒரு சில விவசாயிகள், விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த தண்ணீரை வீணாக்காத வகையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சேகரித்து வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவுகளில், தார்பாய்களை விவசாயிகள் வாங்குகின்றனர்.

தற்காலிக தொட்டிகள்

தார்பாய்களை தங்களது நிலங்களில் விரித்து, அதனை சுற்றி கல் மற்றும் மண் கொண்டு பாத்தி அமைத்து தற்காலிக தொட்டிகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். அதில் மழைநீரையும், நிலங்களில் வழிந்து ஓடும் உபரி நீரையும் தேக்கி வைத்து தக்காளி, கடலை, பூசணி, அவரை, சுரைக்காய் உள்ளிட்ட பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி கிணறுகளில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் இந்த தார்பாய் தொட்டியில் மொத்தமாக தேக்கி, பின்னர் விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்