அரசு விடுதியில் தரமில்லாத உணவு வினியோகம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அரசு விடுதியில் தரமில்லாத உணவு வினியோகம் செய்யப்படுவதாக கூறி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2017-03-15 23:15 GMT

பழனி,

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அரசு கல்லூரி மாணவர் விடுதி பழனியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் படிக்கிற 140 மாணவர்கள் தங்கி உள்ளனர். இங்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி தரம் இல்லாத உணவு தயாரித்து வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து பலமுறை விடுதி நிர்வாகத்துக்கு மாணவர்கள் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட உணவுடன் விடுதி வாசலில் மாணவர்கள் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடிந்துவிழும் நிலையில் கட்டிடம்

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, சமீபத்தில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம் மோசமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சம் நிலவுகிறது. மாணவர்களுக்கு தரம் இல்லாத உணவுகளை தயார் செய்து வழங்கி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லை. இதனால் விடுதி வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கழிவறைகள், குளியலறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றனர்.

தற்போது தேர்வு நடப்பதால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பழனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்