இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும், கலெக்டர் சங்கர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று கலெக்டர் சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2017-03-15 23:30 GMT

ஊட்டி

இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வது குறித்த ஒருநாள் கருத்தரங்கு ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்த கூறியதாவது:– மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் தற்போது 250 மில்லியன் டன் உணவு பொருட்கள் தேவைப்படுகிறது. இதற்காக வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், நவீன சாகுபடி, பசுமை குடில்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற ஆராய்ச்சி முடிவில் உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றும் தாய்ப்பாலிலும் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே விவசாய பொருட்களில் நச்சுத்தன்மை இல்லாமல் உற்பத்தி செய்ய மாற்று வழிகளை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன.

இயற்கை விவசாயம்

நம்முன்னோர்கள் மேற்கொண்ட இயற்கை விவசாயமே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே பூச்சி மருந்துகளை தெளிக்காமலும், ரசாயன உரங்களை பயன்படுத்தாமலும் விவசாயம் மேற்கொள்ள முடியும். இதற்காக பஞ்சகாவியம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். மேலும் விவசாயத்தை அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மாற்று பூச்சிகளை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள வழிமுறைகள் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் முறையில் தேயிலை, காய்கறிகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் நவீன கருவிகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கீரைகள் வாங்கும்போது பசுமையாக இருக்கிறதா? என்று பார்த்து வாங்குகின்றனர். அதிகளவு பச்சையாக இருக்கும் கீரைகளுக்கு கூடுதலாக பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு இருக்கும். இதனை பொதுமக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஸ்ரீவஸ்தவா, முன்னாள் தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீதர், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் உமா ராணி, முன்னாள் உதவி வன பாதுகாவலர் ஜெயராஜ், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்