தற்கொலை செய்த மாணவர் முத்துகிருஷ்ணனின் 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

தற்கொலை செய்த மாணவர் முத்துகிருஷ்ணனின் 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். ஆறுதல் சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன்(வயது 28). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லா

Update: 2017-03-15 23:00 GMT

சேலம்,

தற்கொலை செய்த மாணவர் முத்துகிருஷ்ணனின் 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆறுதல்

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன்(வயது 28). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். முத்துகிருஷ்ணன் கடந்த 13–ந் தேதி டெல்லியில் நண்பர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சேலத்தில் உள்ள முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் முத்துகிருஷ்ணனின் தாய் அலமேலு மற்றும் சகோதரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம், முத்துகிருஷ்ணனை பற்றி தாய் மற்றும் சகோதரிகள் கூறி கதறி அழுதனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

முத்துகிருஷ்ணனை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் சகோதரிகள் கதறி அழுவதை தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் நன்றாக படித்து பல்வேறு கனவுகளை சுமந்துக் கொண்டு டெல்லி சென்று படித்துள்ளார். ஆனால் தற்போது இத்தகைய நிலை ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

முத்துகிருஷ்ணன் துணிச்சல் மிக்கவர் என்பதால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதால், அதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய தாய் மற்றும் சகோதரிகள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கு வந்திருந்த போது எங்களுடைய வீட்டுக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்ல வரவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர். இது நியாயமான கருத்தாகும். மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

தவறான முடிவுகள்

முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு இழப்பீடு மட்டும் அரசு வழங்கினால் போதாது. நன்கு படித்துள்ள அவர்களுடைய 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று ஆதாரமற்ற தகவல்களை சிலர் கூறி வருகின்றனர். வெளி மாநிலத்துக்கு படிக்க செல்லும் மாணவர்கள் நல்ல பாதுகாப்புடன் கூடிய நட்பு வட்டங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

வன்கொடுமை நடந்தால் அதை மாணவர்கள் வெளியே தைரியமாக சொன்னால் அவர்களுக்கு நாங்கள் தோள்கொடுக்க தயாராக இருக்கிறோம். இதற்காக மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் சேலம் தாதகாப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

மேலும் செய்திகள்