கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பெரியகுளம் அருகே மழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Update: 2017-03-15 22:45 GMT

பெரியகுளம்

பெரியகுளம் அருகே மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, வெள்ளகவி, வட்டக்கானல் பகுதியில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்தும் நீர்வரத்து இருக்கும்.

அருவிக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் அருவி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குளிக்க தடை

கடந்த வாரம் சற்று நீர்வரத்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொடைக்கானல், வெள்ளகவி, வட்டக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியின் நுழைவு பகுதியில் உள்ள நுழைவு வாயில் கதவு அடைக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்