திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2017-03-12 23:15 GMT

திருப்பத்தூர்,

தெப்ப உற்சவம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் 108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 3–ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் காப்புக்கட்டுதல் நடைபெற்று தெப்ப திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சாமி சிம்ம வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சே‌ஷ வாகனம், குதிரை வாகனம் முதலிய வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெற்று, 9–ம் திருநாளான்று வெண்ணெய் தாழி சேவையில் சாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 12.30 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது.

இந்தநிலையில் 10–ம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை 8.32 மணிக்கு தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெற்று, சாமி தெப்ப மண்டபத்தில் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது தெப்பகுளத்தினை கருடன் வலம் வந்தது. இதனை கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு ரி‌ஷப லக்கனத்தில் பகல் தெப்பம் சுற்றுதல் நடைபெற்றது. பின்னர் தெப்ப குளக்கரையை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தீபம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஏற்பாடு

இந்த தெப்ப உற்சவத்தை காண திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் டாக்டர்கள், கிராமப்புற செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்