திராட்சை, மாம்பழம், தக்காளி, வாழை போன்றவற்றில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா? விவசாயிகள்–பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திராட்சை, மாம்பழம், தக்காளி, வாழை போன்றவற்றில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா? தேனி மாவட்ட விவசாயிகள்–பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி மாவட்டத்தில் விளை பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் நிலைமைமனிதர்கள் வாழும் வரை இந்த மண்ணில் விவசாயம் இருக்கும். விவசாயம் இந்த மண்ணில் இருக்கும் வரை மனிதர்கள் உயிர் வாழ்வார்கள். விவசாயத்தையும், மனிதர்களின் வாழ்க்கையையும் பிரித்து பார்க்க முடியாது. மனிதர்கள் உயிர் வாழ உணவு அவசியம். விரும்பிய உணவை உண்டபின் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி அனிச்சையாய் உருவாவது இயல்பு.
ஆனால், நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையில், சோகம் என்பது நீங்கியபடி இல்லை. நல்ல மழை பெய்தாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இல்லை. நன்றாக மழை பெய்து பயிர் சாகுபடி அதிகரித்தாலும் விலை வீழ்ச்சி அடைந்து, போதிய வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழ்நிலை உருவாகிறது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், தக்காளி, வெங்காயம் சாகுபடியை சொல்லலாம். தக்காளி விளைச்சல் அதிகரித்தால் ஒரு கிலோ தக்காளியை ரூ.2–க்கு விற்பனை செய்யும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
அதே நேரத்தில் மழை பொய்த்துப் போனால், வறட்சியின் தாக்கத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்க வேண்டியது உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தற்போது விவசாயிகள் பெரிய அளவிலான பாதிப்புகளை தான் சந்தித்து, தினமும் அனுபவித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட விவசாயம்விவசாயிகளின் சோகம் தீர வேண்டும் என்றால் அவர்கள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்க வேண்டும். விளைச்சல் அதிகமானால் விலை வீழ்ச்சி அடைவதும், செடிகளில் பறிக்காமல் வீணாவதும், பறித்த பழங்கள்–காய்கறிகள் சாலையோரம் கொட்டப்பட்டு வீணாவதும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு விளை பொருட்கள் வீணாகி, விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் பகுதிகளில் தேனி மாவட்டம் முக்கிய இடம் பிடிக்கிறது.
தேனி மாவட்ட மக்கள் தொகை சுமார் 14 லட்சம். இவர்களில் வாக்களிக்கும் வயதில் சுமார் 10½ லட்சம் பேர் இருக்கிறார்கள். இங்கு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என சுமார் 6 லட்சம் பேர் உள்ளனர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் இங்கு வறட்சி என்பது விவசாயிகளை மட்டுமல்லாது விவசாய தொழிலாளர்களையும் பாதிப்பு அடையச் செய்கிறது.
விவசாயத்தில் தேனி மாவட்டத்தின் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஆண்டு முழுவதும் திராட்சைப் பழங்கள் கிடைக்கும். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விளைச்சல் அதிகரிக்கும் போது, இங்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஏரளமான விவசாயிகள் திராட்சை சாகுபடியை கைவிட்டுள்ளனர். இங்கு திராட்சை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்றால் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் தேவை. திராட்சை பழங்களில் இருந்து ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை, உலர் திராட்சை, திராட்சை பழச்சாறு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கப்படவில்லை.
மாம்பழக்கூழ் தொழிற்சாலைபெரியகுளம், தேனி அல்லிநகரம், போடி, கூடலூர், ஆண்டிப்பட்டி போன்ற பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இங்கு விளைச்சல் அடையும் மாங்காய், மாம்பழங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இங்கு விளைச்சல் அதிகரிக்கும் போது சாலையோரம் மாம்பழங்கள் அழுகிய நிலையில் கொட்டப்படும் அவல நிலையை பார்க்க முடியும். ஏனெனில் மாங்காய் மற்றும் மாம்பழங்களை சந்தைப்படுத்த போதிய வாய்ப்புகளும், வசதிகளும் இங்குள்ள விவசாயிகள் பலருக்கு கிடைப்பதில்லை. பெரியகுளம், போடியில் சீசன் காலங்களில் சாலையோரம் வைத்து விற்பனை செய்வதே விவசாயிகளின் சந்தை யுக்தியாக உள்ளது.
பெரியகுளம், போடியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, மாங்காய் மற்றும் மாம்பழத்தில் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம் என்பதால், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை போன்றவை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம் பெரியகுளம், போடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக, மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைப்போம் என்பது இடம் பெறுவது வழக்கம். ஆனால், வாக்குறுதிகள் தேர்தலுக்கு பிறகு தீர்வை நோக்கி பயணிப்பதில்லை என்பது விவசாயிகளின் விரக்தியாக உள்ளது. எனவே பெரியகுளம், போடி பகுதிகளில் மாங்காய் மற்றும் மாம்பழங்களில் இருந்து பழக்கூழ், வடாகம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் இங்குள்ள மா விவசாயிகளின் வாழ்க்கை வளம்பெறும்.
தக்காளி ஜாம் தயாரிப்புதேனி, நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், கொடுவிலார்பட்டி, அம்பாசமுத்திரம், உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. தக்காளி அதிக விளைச்சல் அடையும் போது பறிக்கப்படாமல் செடிகளில் விடப்பட்டு, வீணாகி வருவது தொடர்கதையாக உள்ளது. ஸ்ரீரெங்காபுரம் அல்லது நாகலாபுரம் பகுதியில் தக்காளிப் பழத்தில் இருந்து ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் தக்காளியை பாதுகாக்கும் குளிர்பதன கிட்டங்கி போன்றவை அமைக்கப்பட்டால் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரம். நஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, கண்ணீர் சிந்தும், கவலை கொள்ளும் நிலைமை மாறும்.
வாழை விவசாயிகளின் நிலைமையும் கவலைகள் நிறைந்ததே. வாழை விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம் தேனி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளன. ஆனால், வாழை சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் மத்தியில் தயக்க நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வாழை விவசாயிகள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருவதும் இதற்கு காரணம். விளைச்சல் அடைந்த வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே, வாழைக்காய், வாழைப்பூ, வாழைப் பழம், வாழைத் தண்டு போன்றவற்றில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும், அதற்கான சந்தைகளும் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவைதற்போதைய சூழ்நிலையில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் விவசாய விளை பொருட்கள் சார்ந்தவையாக இருந்தால் விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள், விவசாயமும் அழிவில் இருந்து மீட்கப்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் தேனி மாவட்டத்தில் விவசாய விளை பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க உரிய திட்டங்களை தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் அமைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.