கோலாப்பூரில் பயங்கரம் வீடு புகுந்து எழுத்தாளர் குத்திக்கொலை பொதுமக்கள் போராட்டத்தால் பதற்றம்
கோலாப்பூரில் வீடு புகுந்து எழுத்தாளர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பதற்றம் நிலவியது.;
மும்பை,
கோலாப்பூரில் வீடு புகுந்து எழுத்தாளர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பதற்றம் நிலவியது.
எழுத்தாளர் குத்திக்கொலைகோலாப்பூரில் உள்ள ராஜேந்திர நகர் மகாடா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணா கிர்வலே(வயது60). எழுத்தாளர். அம்பேத்கர் கொள்கையை பின்பற்றி வந்த அவர், தலித் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று கிருஷ்ணா கிர்வலே தனது வீட்டில் இருந்தார். அப்போது மர்மஆசாமி ஒருவன் கையில் கத்தியுடன் அவரது வீட்டிற்குள் புகுந்து, கிருஷ்ணா கிர்வலேவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதில், படுகாயம் அடைந்த கிருஷ்ணா கிர்வலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தகவல் அறிந்து வந்த ராஜபூரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ராஜேந்திர நகரில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மேலும் அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கிருஷ்ணா கிர்வலேயை கொலை செய்ததாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த தச்சு தொழிலாளி ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கிருஷ்ணா கிர்வலேயை சம்பந்தப்பட்ட தச்சு தொழிலாளி கொலை செய்யவில்லை என்றும், உண்மை குற்றவாளியை காப்பாற்ற அவர் சரண் அடைந்து இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.