கார்–மோட்டார் சைக்கிள் மோதல் பெண் உள்பட 3 பேர் பலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

எமகெனர்மடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.;

Update: 2017-03-03 22:30 GMT

மங்களூரு,

எமகெனர்மடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஜாகி தேசாய்(வயது 34), அப்துல் ரசாக்(33), கலியில் பட்டீல்(55). இவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், குக்கேரி தாலுகாவில் வசித்து வந்த இவர்களுடைய உறவினர் இறந்துவிட்டார்.

இதனால் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இவர்கள் கரோதி கிராமத்தில் இருந்து குக்கேரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கரோதி கிராமத்திற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அப்துல் ரசாக் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

கார்–மோட்டார் சைக்கிள் மோதல்

இவர்கள் நேற்று அதிகாலையில் எமகெனர்மடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் காரின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் டிரைவரும் படுகாயம் அடைந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த எமகெனர்மடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் காயமடைந்திருந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் இறந்த முஜாகி தேசாய் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து எமகெனர்மடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்