குடிநீர் வழங்க கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-03-03 22:15 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சியில் உள்ள கே.கருப்பம்பட்டி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பருவமழை பெய்யாததால் அந்த பகுதயில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீரின்றி பயிர் கருகும் நிலையில் உள்ளதால் சோகத்தில் முழ்கி உள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊராட்சியால் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படாததால், கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் வரவில்லை என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அத்திரம் அடைந்த கே.கருப்பம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் வந்து குடிநீர் வழங்க கோரி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மின் மோட்டார் பழுது

அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார் பழுது அடைந்துள்ளதால், தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அதை சரி செய்து தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்