கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டிக் கொலை; சினிமா தயாரிப்பாளர் படுகாயம் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

பெங்களூருவில் பணத்தகராறில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது நண்பரான கன்னட சினிமா தயாரிப்பாளர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-03-03 19:33 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் பணத்தகராறில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது நண்பரான கன்னட சினிமா தயாரிப்பாளர் படுகாயம் அடைந்தார். இதில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

பெங்களூரு மகாலட்சுமி லே–அவுட் அருகே வசித்து வந்தவர் மனோஜ் (வயது 30), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது நண்பர் சொரூப். இவர், கன்னட சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். சொரூப் தனது நண்பர் ராமு உள்ளிட்டோர் சேர்ந்து ஒரு கன்னட படத்தை தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தை தயாரித்து வினியோகம் செய்ததில் சொரூப், ராமு இடையே பணத்தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு சொரூப், ராமு சரியாக பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சொரூப், தனது நண்பர்களான மனோஜ், கோபி, கமல் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார். இதில், ராமுவும் கலந்துகொண்டார். அப்போது குடிபோதையில் சொரூப், ராமு இடையே உள்ள பணத்தகராறு தொடர்பாக, அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. உடனே சொரூப், மனோஜ், கோபி, கமல் ஆகியோர் ராமுவை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து ராமு புறப்பட்டு சென்றார்.

வெட்டிக் கொலை

பின்னர் சில நிமிடங்கள் கழித்து தனது கூட்டாளிகளுடன் ராமு அங்கு வந்தார். இந்த நிலையில், ராமு, அவரது கூட்டாளிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சொரூப், மனோஜ் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மனோஜ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தில் சொரூப்பும் படுகாயம் அடைந்தார்.

உடனே அங்கிருந்து ராமு தனது கூட்டாளிகளுடன் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. பின்னர் மனோஜ், சொரூப்பை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் நண்பர்கள் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்து விட்டார். சொரூப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று மகாலட்சுமி லே–அவுட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சொரூப், ராமுவுக்கு இடையே இருந்த பணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் மனோஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராமு, அவரது கூட்டாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மகாலட்சுமி லே–அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்