வேடசந்தூர் அருகே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

வேடசந்தூர் அருகே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2017-03-03 22:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி சின்னராவுத்தன்பட்டியில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுபோதாதென்று எட்டிக்குளத்தில் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுக்குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோவிலூர்– வேடசந்தூர் ரோட்டில் ஒட்டன்சத்திரத்திற்கு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி சின்னராவுத்தன்பட்டிக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் கடும் வறட்சி நிலவுவதால் ஆழ்துளை கிணறு மூலம் சிறிதளவு தண்ணீரே கிடைக்கிறது. அந்த தண்ணீரை பிடிப்பதற்கும் பொதுமக்கள் பொதுக்குழாயில் காத்து கிடக்கின்றனர். அதுவும் சிறிது நேரம் மட்டுமே வருவதால் அந்த பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைய வேண்டி இருக்கிறது. தண்ணீரை தேடி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். இருந்தபோதிலும் கடும் வறட்சியால் கிணறுகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால் தண்ணீர் பிடிப்பதற்கு அருகில் உள்ள ஊர்களுக்கு செல்கின்றனர்.

மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிப்பதற்கே தண்ணீர் பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்