வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி 6–ந்தேதி சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி மேலப்பிடாகையில் வருகிற 6–ந்தேதி சாலைமறியல் நடைபெறுகிறது;
வேளாங்கண்ணி,
ஒன்றிய குழு கூட்டம்நாகை மாவட்டம் கீழையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–
2015–16–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு கூட்டு வட்டியும், அபராத வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்காமலும், வடகிழக்கு பருவமழையும் பெய்யாத நிலையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி அதற்கு கூலி ரூ.400 அறிவித்து, வாரந்தோறும் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் போதிய அளவில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும். வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6–ந்தேதி கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கண்ணையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சிவதாஸ், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்லையன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.