குமரியில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருந்த வங்காளதேச பெண், சொந்த ஊருக்கு செல்ல போலீசார் உதவ வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமதுசம்செல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை,
என்னுடைய மகள் சபனா என்கிற ரிமாகதூன் (வயது 40) மும்பையில் தங்கி உள்ள தனது தங்கையை பார்க்க இந்தியா வந்தார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். இந்தநிலையில் 23.7.2016 அன்று அவரை விபசார தடுப்பு வழக்கில் கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் 1–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் மாஜிஸ்திரேட்டுவிடம் அளித்த வாக்குமூலத்தில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. சுற்றுலாவுக்காக தான் இந்தியா வந்துள்ளேன். நான் பாதிக்கப்பட்டவள்" என்று கூறினார். இதனையடுத்து அவரது வாக்குமூலம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி, எனது மகளை சொந்த ஊருக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் அவரது விசா காலாவதி ஆனது. இதனால் அவரை கடந்த 7 மாதமாக சட்டவிரோதமாக தனியார் காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே எனது மகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:–
சபனா, அவரது பெற்றோருடன் செல்லலாம். அவர் சொந்த ஊருக்கு செல்ல பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நடவடிக்கைகளை கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்ய வேண்டும். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். கோர்ட்டு மூலம் மனுதாரர்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.