அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு மையம்வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. இங்கு மோப்ப நாய்களுக்கு தனியாக பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் வீரர்களால் கண்டுபிடிக்க முடியாத இடர்பாடு விபத்துகளை மோப்ப நாய்களின் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையத்தில் 19 மோப்ப நாய்கள் உள்ளன.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டன்ட் ரேகா நம்பியார் மோப்ப நாய்களுக்கு ரெயில் நிலையங்களில் வைத்து கூடுதல் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 18 மோப்ப நாய்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மோப்ப நாய்களுக்கு பயிற்சிஇதனையடுத்து ரெயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களில் ரெயில்கள் செல்லும் போது அதனுடைய சத்தங்களை கேட்டு மோப்பம் பிடித்து துப்பறிதல், பயணிகளின் உடமைகளை மோப்பம் பிடித்து அதில் உள்ள மர்ம பொருட்களை கண்டறிதல், பொதுமக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களில் பொதுமக்களோடு கலந்து மோப்பம் பிடித்து துப்பறிந்து கண்டுபிடித்தல், கட்டிடங்கள் மீது ஏணி, கயிறு மூலமாக ஏறி இடர்பாடுகளில் சிக்கியவர்களை மோப்பம் பிடித்து மீட்பது, ரெயில் பெட்டிகளில் சமூக விரோதிகளால் வைக்கப்படும் வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறிதல் போன்ற கூடுதல் பயிற்சிகள் நாய்களுக்கு அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது நாய்களுக்கான பயிற்சி பயிற்றுனர்கள் விஸ்வநாதன், பாலமுருகன், கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
பரபரப்புகாலை நேரத்தில் பரபரப்பாக காணப்படும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 18 மோப்ப நாய்களுடன் வீரர்கள் பிளாட்பாரங்களில் சுற்றி கொண்டிருந்ததை பார்த்த ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில் நிலையத்தில் ஏதாவது பிரச்சினையா என்று ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டனர்.
அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையில் உள்ள மோப்ப நாய்களுக்கு ரெயில் நிலையத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியவுடன் பயணிகள், பொதுமக்கள் நிம்மதியாக சென்றனர்.
இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.