தர்மபுரியில் தீயணைப்புதுறை பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி 9 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

தீயணைப்புதுறை பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி தர்மபுரியில் நேற்று தொடங்கியது.

Update: 2017-03-03 18:45 GMT

தர்மபுரி,

மண்டல விளையாட்டு போட்டி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையை சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்ற மேற்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இந்த போட்டிகளை மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்கள் அழகப்பன் (நாமக்கல்), வாசுதேவன் (சேலம்), கிருஷ்ணமூர்த்தி(திண்டுக்கல்), பூபதி (திருப்பூர்), சந்திரன் (கோவை), இளங்கோ (நீலகிரி) ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். முதல்கட்டமாக தீயணைப்பு துறை பணியாளர்களுக்கு துறை சார்ந்த உடல் தின்ற போட்டிகள் நடைபெற்றன. பின்னர் கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

9 மாவட்டங்கள்

இந்த போட்டிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர்,கோவை, ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 150 தீயணைப்பு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினார்கள். இன்று (சனிக்கிழமை) இவர்களுக்கான தடகள போட்டிகள் நடக்கின்றன.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசளிப்பு விழா, இன்று மாலை தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு தீயணைப்பு துறையின் மேற்கு மண்டல இணை இயக்குனர் விஜய்சேகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள், பதக்கங்களை வழங்குகிறார். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள மாநில அளவிலான தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

மேலும் செய்திகள்