மும்பை மாநகராட்சிக்கு தேர்வான 43 கவுன்சிலர்கள் குற்ற பின்னணி உடையவர்கள் அதிர்ச்சி தகவல்

மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 43 பேர் குற்ற வழக்கு பின்னணி உடையவர்கள் என்று தெரியவந்தது.

Update: 2017-03-02 22:13 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 43 பேர் குற்ற வழக்கு பின்னணி உடையவர்கள் என்று தெரியவந்தது.

43 பேர் மீது குற்றவழக்கு

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 21–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், அதிகப்பட்சமாக சிவசேனா 84 இடங்களையும், பாரதீய ஜனதா 82 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பிடித்தன.

இந்த நிலையில், தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 43 பேர், அதாவது 19 சதவீதத்தினர் குற்ற வழக்கு பின்னணி உடையவர்கள் என்று தெரியவந்தது.

கற்பழிப்பு வழக்கு

இதில் சிவசேனாவை சேர்ந்த 22 பேர், பா.ஜனதாவை சேர்ந்த 11 பேர், நவநிர்மாண் சேனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் காங்கிரசை சேர்ந்த 2 பேர், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும், 2 சுயேச்சைகள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களில் 3 பேர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் 25 ஆண்டுகள் கழித்து, வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல், குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்