விக்கிரமசிங்கபுரம் அருகே யானைகள் மீண்டும் அட்டகாசம் தென்னை மரங்களை சாய்த்தன

விக்கிரமசிங்கபுரம் அருகே யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்தன. தென்னை மரங்களை சாய்த்து நாசம் செய்தன.

Update: 2017-03-02 23:00 GMT
விக்கிரமசிங்கபுரம்,


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியானது அரவன்குடியிருப்பு. இங்கு சுப்பிரமணியன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை, மா மரங்களை சாய்த்து நாசம் செய்தன.

இதனை அறிந்த வனத்துறையினர் அரவன்குடியிருப்பு பகுதியில் முகாமிட்டனர், விடிய விடிய முகாமிட்டு தீபந்தம் ஏற்றியும், வெடி வெடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

மீண்டும் அட்டகாசம்


இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் மீண்டும் அரவன்குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. அங்கு விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை சாய்த்து நாசம் செய்து விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டன.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் வனத்துறையினர் அங்கு சென்று உள்ளதாகவும், அதனால் யானைகள் அட்டகாசம் செய்த இடத்துக்கு வனத்துறையினர் யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தண்ணீர் தேடி...


மலைப்பகுதியில் இருந்து ஒரு நீரோடை அரவன்குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது. அந்த ஓடை வழியாக யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்