ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-02 23:00 GMT
திருவாரூர்,

தமிழகத்தில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டது. ஆனால் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல் படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிக்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு நகர தலைவர் பிரசாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோசிமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் சண்முகவடிவேல் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை-னையடுத்து போராட்டத்தை கைவிட்டு வாலிபர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்