ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம்: மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது என்று தஞ்சையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-03-02 23:00 GMT
தஞ்சாவூர்,

செயல்வீரர்கள் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமை தாங்கினார். தஞ்சை மாநகர தலைவர் விநாயகம் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வு தொடங்கி உள்ளது. இதே போல் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்கும் சிறப்பாக பயின்று நீட் தேர்வு எழுதி டாக்டர்களாக கிராமப்புற மாணவர்களும் வர வேண்டும். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 8 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது எதை காட்டுகிறது என்றால் கிராமப்புற மாணவர்கள் கூட நன்றாக பயிற்சி பெற்றால் நீட் தேர்வை எழுதி டாக்டர்கள் ஆகலாம். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பயன்தராது என்று கூறுகிறார்கள். அரசு பள்ளிகளில் பயின்றவர்கள், கிராமப்புற மாணவர்கள் இது வரை நடந்த மருத்துவகல்லூரிக்கான அனுமதியில் 2 சதவீதம் தான் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அப்படி என்றால் நீட் தேர்வை வைத்து கிராமப்புற மாணவர்களுக்கு சரியான பாடத்திட்டத்தை கொடுத்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய மந்திரி தர்மேந்திரபிராதான், 2 உயர் அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி அவர்கள் என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது, விவசாயம் பாதிக்காது, கடல்நீர் உட்புகாது, பாலைவனம் ஆகி விடும் என கூறுவது தவறு என கூறினர். இந்த திட்டத்தை கடந்த 2008-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது அனுமதி கோரியது. 45 நாட்களில் அரசு பதில் அளிக்காவிட்டால் அந்த திட்டம் ஒப்புதலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படும். அந்த வகையில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெடுவாசல் பகுதி மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதனை மத்திய அரசு செயல்படுத்தாது. தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காது என கூறி விட்டதால் மத்திய அரசும் அனுமதிக்காது. நல்ல திட்டத்தை எதிர்த்தால் தமிழகம் வளராது. எந்த முதலீடும் வராது. நீட், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

பா.ஜ.க. தாக்கத்தை ஏற்படுத்தும்

மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அவர்களால் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அவரால் காங்கிரஸ் தொண்டர்களை கூட திரட்ட முடியாது. ஏன் என்றால் அவரை இளங்கோவனுக்கு கூட அடையாளம் தெரியவில்லை. இதில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மாற்று சக்தியாக உருவெடுத்து தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களது முக்கியத்துவம் உள்ளாட்சி தேர்தல் குறித்து தான். சட்டமன்ற தேர்தலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். காரணம் இங்குள்ள அரசியல் சூழ்நிலை அப்படி உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பிரதமரை சந்திக்கலாம். ஆனால் அமைச்சர்கள் பெங்களூரு சென்று சிறையில் இருப்பவர்களை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம். அது ஜனநாயக முறைப்படி தவறு.

மாற்றத்தை விரும்புகிறார்கள்

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எதிர்க்கட்சியாக, ஒற்றுமையாக இருந்திருந்ததால் இந்த ஆட்சி அமைந்து இருக்காது. 15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்கு அளித்து இருப்பார்கள். ஆனால் தமிழக சட்டசபை, சட்டையை கிழிக்கும் சபையா? என சந்தி சிரிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சி தான் வேண்டும். நிழல் ஆட்சி தேவை இல்லை. தமிழகத்தில் பினாமி ஆட்சி நடந்து கொண்டு இருப்பது நல்லதல்ல. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை கொடுப்பது பாரதீய ஜனதா கட்சியாகத்தான் இருக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது இதனை செய்திருந்தால் இப்போது விசாரணை முடிந்திருக்கும். அதே போல் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த போதும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா மரணம் அரசியல் ஆக்கப்படுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை விளக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் அடைந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என்றால் தமிழக அரசு நடந்தவற்றை கூற வேண்டியது தானே.

நிராகரிக்க வேண்டும்

தாமிரபரணி ஆற்றில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனம் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் இல்லை. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் நான் தலையிட விரும்பவில்லை. எந்த அடிப்படையில் நீதிமன்றம் அதை சொன்னது என தெரிய வில்லை. மக்களே வெளிநாட்டு பானங்களை நிராகரிக்கும் சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. எனவே வெளிநாட்டு பானங்களை நிராகரிப்பது தான் இதற்கு பதிலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம், மாநில துணைத்தலைவர் அரசகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், இணை பொறுப்பாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் அய்யாரப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் உமாபதி, மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் கர்ணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்