ஆத்தூர் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆத்தூர் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2017-03-02 21:22 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் நாவல் நகரில் உள்ள மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், முதற்கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, நாடிசந்தனம், அரசு வேம்பு பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து முரளிசிவாச்சாரியார் கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

திரளான பக்தர்கள்

பின்னர் மகா கணபதிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்