தாறுமாறாக ஓடிய கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது; கர்ப்பிணி பலி கணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மைசூரு அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பலியானார்.

Update: 2017-03-02 19:30 GMT

மைசூரு,

மைசூரு அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பலியானார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்ப்பிணி பலி

மைசூரு ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி ரூபா(வயது 32). இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் ரூபாவின் தங்கை பன்னூர் பகுதியில் புதிதாக ஒரு நிலம் வாங்கினார். அந்த நிலத்தை பார்ப்பதற்காக ரூபாவும், அவருடைய கணவரும் நேற்று முன்தினம் காரில் பன்னூருக்கு புறப்பட்டனர்.

அங்கு நிலத்தை பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் மைசூரு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை மதுசூதனன் ஓட்டினார். அவர்கள் பெங்களூரு–பன்னூர் ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே பலியானார். மதுசூதனன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சித்தார்த்தா நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

மண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ். கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லம்மா(60). இவர் நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, நல்லம்மா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நல்லம்மா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.எஸ். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்