வரதட்சணை கேட்டு கொடுமை: கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவிக்கு பாலியல் தொல்லை மாமனார் மீது போலீசில் புகார்

பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறி மாமனார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-03-02 19:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறி மாமனார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி

துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், பெங்களூரு இந்திராநகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. லட்சுமியின் கணவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதனால், அவர் திருமணம் நடந்த ஓரிரு வாரத்தில் லட்சுமியை இந்திராநகரில் தனது பெற்றோருடன் விட்டுவிட்டு, அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் லட்சுமி தனது மாமனார், மாமியாருடன் இந்திராநகரில் வசித்தார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த லட்சுமிக்கு, அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி லட்சுமியை அவர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தனது கணவரிடமும், மாமியாரிடமும் லட்சுமி கூறியும், அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டதாக கூறப்படுகிறது.

மாமனார் மீது போலீசில் புகார்

இதனால் மனம் உடைந்த லட்சுமி, பெங்களூரு பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கொடுத்தார். மேலும் அதில், தனது மாமனாருக்கு உடந்தையாக மாமியார் இருப்பதாகவும் லட்சுமி தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், லட்சுமியின் மாமனார், மாமியார் மீது பசவனகுடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்