பிரதமருக்கு, முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் தேசிய வங்கிகளில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

தேசிய வங்கிகளில் உள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி பிரதமருக்கு முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-03-02 20:15 GMT

பெங்களூரு,

தேசிய வங்கிகளில் உள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி பிரதமருக்கு முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–மந்திரி சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

ரூ.52 ஆயிரத்து 881 கோடி கடன்

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. 160 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்தனர். ஆனால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிட்டன. அதனால் அந்த கடனை திருப்பி செலுத்த அவர்களால் முடியவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். கர்நாடகத்தில் விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.52 ஆயிரத்து 881 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர். இதில் 20 கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் தான்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

தேசிய வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இதை செய்தால் கஷ்டத்தில் சிக்கியுள்ள விவசாயிகள் பயன் அடைவார்கள். அதே போல் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய மாநில அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்