அவதூறு பரப்பும் முதல்–மந்திரி சித்தராமையா மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் எடியூரப்பா பரபரப்பு பேட்டி

மக்கள் மத்தியில் என்னைப்பற்றி அவதூறு பரப்பி வரும் முதல்–மந்திரி சித்தராமையா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என எடியூரப்பா கூறினார்.

Update: 2017-03-02 20:30 GMT

மைசூரு,

செல்லும் இடங்களில் எல்லாம் என்னை ஊழல் வாதி, சிறைக்கு சென்று வந்தவர் என்று கூறி மக்கள் மத்தியில் என்னைப்பற்றி அவதூறு பரப்பி வரும் முதல்–மந்திரி சித்தராமையா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா

பா.ஜனதாவின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா நேற்று மைசூருவுக்கு சென்றார். அவர், மைசூரு ராமானுஜ சாலையில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஜெயதேவாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருடைய குடும்பத்தினரை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பயப்படமாட்டேன்

நான்(எடியூரப்பா) நில முறைகேட்டில் ஈடுபட்டதாக என் மீது புகார்கள் எழுந்தன. அதுதொடர்பான வழக்கில் இருந்து கோர்ட்டு என்னை விடுதலை செய்தது. அதில் இருந்து நான் குற்றமற்றவன் என்று மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் கர்நாடகத்தில் தற்போது ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசு, என் மீதான நில முறைகேடு புகார்களை மீண்டும் தோண்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த வழக்கிற்கான ஆதாரங்களையும் காங்கிரஸ் திரட்டி வருகிறது. ஊழல் நடந்திருந்தால்தானே ஆதாரம் கிடைக்கும். அதனால் நான் பயப்படப் போவதில்லை.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடட்டும்

பெங்களூருவில் இரும்பு பாலம் கட்டுவதிலும் முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்தராமையா ரூ.65 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை நான் வெளியிட்டால் சித்தராமையா சிறைக்கு செல்வது நிச்சயம்.

காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்தராமையா பணம் கொடுத்தது தொடர்பான விவகாரம் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அவருக்கு தைரியம் இருந்தால் இந்த விவகாரம் குறித்து அவர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடட்டும்.

மான நஷ்ட வழக்கு தொடருவேன்

சித்தராமையா தான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைப்பற்றி ஊழல் வாதி, சிறைக்கு சென்று வந்தவர் என்று கூறி மக்கள் மத்தியில் அவதூறு பரப்பி வருகிறார். அதனால் நான் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். மாநில அரசுக்கு எதிராக நான் தொடங்கியிருக்கும் இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்