பா.ஜனதாவின் கடும் எதிர்ப்பால் ரூ.1,791 கோடி மதிப்பீலான இரும்பு மேம்பால திட்டம் ரத்து மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
பா.ஜனதாவின் கடும் எதிர்ப்பால் ரூ.1,791 கோடி மதிப்பீட்டிலான இரும்பு மேம்பால திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதாவின் கடும் எதிர்ப்பால் ரூ.1,791 கோடி மதிப்பீட்டிலான இரும்பு மேம்பால திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
இரும்பு மேம்பாலம்பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளில் இருந்து ஹெப்பால் மேம்பாலம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் இரும்பு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை பெங்களூரு வளர்ச்சி ஆணையம் மூலம் அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. டெண்டர் பணிகள் முடிந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக சுமார் 800 மரங்களை வெட்ட அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இரும்பு மேம்பால திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. பா.ஜனதா கட்சியும் அந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தது.
குறிப்பேடு விவரங்கள்கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.சி. ஒருவரின் வீட்டில் சிக்கியதாக ஒரு குறிப்பேடு விவரங்கள் வெளியானது. அதில் இரும்பு மேம்பால திட்ட பெயரில் ரூ.65 கோடி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அது சித்தராமையாவுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் என்று எடியூரப்பா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு சித்தராமையா மிக கோபமாகவே எடியூரப்பாவை குறை கூறினார். இந்த நிலையில் பெங்களூரு நகர எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இரும்பு மேம்பால திட்டத்தை ரத்து செய்யுமாறு பேசினர். அந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. கூறினார்.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுஇதனால் கோபம் அடைந்த மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஊழல் குற்றச்சாட்டை சுமந்து கொண்டு இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறினா£ர். உடனே அவர் சித்தராமையாவுடன் செல்போனில் பேசி இதுபற்றி ஆலோசனை நடத்தினார். இரும்பு மேம்பால திட்டத்தை ரத்து செய்யுமாறு சித்தராமையா அவருக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் சாளுக்கிய சர்க்கிளில் இருந்து ஹெப்பால் வரையில் இரும்பு மேம்பாலம் அமைக்க முடிவு செய்தோம். இந்த திட்டத்தை பா.ஜனதா கட்சியும், சில தொண்டு நிறுவனங்களும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தன. இதில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்கவில்லை.
இரும்பு மேம்பால திட்டம் ரத்துஅவ்வாறு ஊழல் நடந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக கூறினால் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இந்த திட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை உள்பட எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார். ஆனால் இந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதா கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஊழல் அவப்பெயரை தாங்கிக்கொண்டு இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
எனவே, இரும்பு மேம்பால திட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதற்கு சித்தராமையா ஒப்புதல் வழங்கியுள்ளார். எங்களின் நேர்மையை நிரூபிக்க நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க அக்னி குண்டத்தில் இறங்கவும் தயார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பா.ஜனதா கட்சி மக்கள் நலத்திட்டங்களுக்கு, வளர்ச்சி பணிகளுக்கு எதிரான கட்சி. அந்த கட்சிக்கு பெங்களூரு நகர மக்கள் தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பசுமையை பாதுகாக்க...மரங்களை வெட்டாமல் மேம்பாலம் அமைக்குமாறு கூறுகிறார்கள். மரங்களை வெட்டாமல் மேம்பாலமோ அல்லது சாலையை அகலப்படுத்தும் திட்டமோ அமல்படுத்த சாத்தியம் இல்லை. அவ்வாறு ஏதாவது ஆலோசனை இருந்தால் பா.ஜனதா கட்சியோ அல்லது தொண்டு நிறுவனங்களோ கூற வேண்டும். அதே நேரத்தில் பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பா.ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்ததை அடுத்து இந்த இரும்பு மேம்பால திட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.